செப்டம்பர் 17-ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக்கான நாளாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, September 14, 2021

செப்டம்பர் 17-ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக்கான நாளாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு

 செப்டம்பர் 17-ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக்கான நாளாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு

உறுதி மொழி - தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர்-17 ஆம் நாளை ஆண்டுதோறும் ' சமூகநீதி நாள்' ஆக அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது - ஆணை வெளியிடப்படுகிறது. 

பொது (பொது-I)த் துறை அரசாணை (நிலை) எண்:777 நாள்: 13.09.2021 பிலவ வருடம், ஆவணி-28 திருவள்ளுவர் ஆண்டு - 2052 படிக்கப்பட்டது;

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு நாள்.06.09.2021. 
*** 

ஆணை:- 

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 06.09.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச் சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் "சமூக நீதி நாள்" ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என சட்டமன்ற விதி எண். 110-ன் கீழ் அறிவித்தார்கள். 

2. ' மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்' இவை இரண்டும் தான் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும் தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. அவரது சுயமரியாதைச் சிந்தனையால், தமிழினம் சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது. அவர் உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம் சிந்தனைத் தெளிவு பெற்றது. இன்று தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம். 

3. சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளி, பெண்களைச் சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் "சமூக நீதி நாள்" உறுதி மொழியை எடுத்துக் கொள்ளும் விதமாக கீழ்கண்டவாறு உறுதி மொழியினை அனுசரிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது:- 






சமூக நீதி நாள் உறுதிமொழி 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்! 

சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! 

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்! 

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்! 

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!


 (ஆளுநரின் ஆணைப்படி) வெ. இறையன்பு, தலைமைச் செயலாளர். 

பெறுநர்: 

அனைத்து துறைச் செயலாளர்கள், தலைமைச் செயலகம், சென்னை-9. 
அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள். அனைத்து துறைத் தலைவர்கள். பணி மேலாளர், அரசு அச்சகம், சென்னை-79. (அரசிதழில் வெளியிட வேண்டி) 
இயக்குநர், எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை, சென்னை-9. செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தர்வாணையம், சென்னை-3. 
பதிவாளர், உயர்நீதிமன்றம். சென்னை-104. 
ஆளுநர் செயலர், ராஜ்பவன், சென்னை-22. 
முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்-1, தலைமைச் செயலகம், சென்னை-9. 
முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலகம், சென்னை-9. பொது (மி.க.)த் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9. 

இருப்பு கோப்பு உதிரி நகல். //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// பிரிவு அலுவலர் அ-சார்து அருன் 13/9/21 3.1.202

No comments:

Post a Comment