புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை...! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, November 14, 2021

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை...!

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. இதனால் தமிழகத்துக்கு இனி வரக்கூடிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை காலமான தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது கன்னியாகுமரி, நெல்லை உள்பட ஓரிரு இடங்களில் மழை கொட்டி வருகிறது. 

 இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

 நாளை (திங்கட்கிழமை) தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), 16-ந்தேதியும் (புதன்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருக்கிறது. 

இது ஆந்திரா நோக்கி தான் செல்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) -ந்தேதியும் மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

 ‘தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை’ அந்தமானில் உருவாகி இருக்கும் தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு இனி வரக்கூடிய நாட்களில் கன மழைக்கு எதுவும் வாய்ப்பு இருக்கிறதா? என்று ஆய்வு மையத்தின் இயக்குனர் என்.புவியரசனிடம் கேட்டபோது, 'அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று ஆந்திரா நோக்கிதான் செல்கிறது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை. 

 வட தமிழகத்தில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும். வடதமிழக கடலோர பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதேநேரத்தில் தாழ்வு மண்டலம் தெற்கு நோக்கி நகர்ந்தால், தமிழகத்தில் தரைக்காற்றுக்கு மட்டும் வாய்ப்பு இருக்கிறது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்துக்கு பிறகு, இது புயலாக மாறுவதற்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக ஆந்திராவுக்கு மட்டும் தான் மழை இருக்கும்' என்றார்.

 தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், ‘கன்னிமார் 14 செ.மீ., தக்கலை, சுருளக்கோடு தலா 13 செ.மீ., சிவலோகம், பெருஞ்சாணி அணை தலா 12 செ.மீ., புத்தன் அணை 11 செ.மீ., இரணியல், நாகர்கோவில் தலா 10 செ.மீ., குழித்துறை, சித்தார், கொட்டாரம், பேச்சிப்பாறை தலா 9 செ.மீ., மயிலாடி, பூதப்பாண்டி தலா 7 செ.மீ., சின்னக்கல்லாறு, குளச்சல் தலா 5 செ.மீ., சூளகிரி, கன்னியாகுமரி, ராதாபுரம் தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment