சென்னை விமான நிலையத்தில், ஆர்.டி.பி.சி.ஆர்., கொரோனா சோதனை மேற்கொள்ளும் பயணியருக்கு, ஐந்து மணி நேரத்தில் முடிவுகள் வழங்குவதாக சென்னை விமான நிலையம் தெரிவித்து உள்ளது.
கொரோனாவின் 'ஒமைக்ரான்' வைரஸ் பரவலை தடுக்க, தென் ஆப்ரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், சிங்கப்பூர் உட்பட 12 நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணியரிடம், ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோதனை முடிவுகள் வரும் வரை, அந்த பயணியரை விமான நிலையத்திலேயே காத்திருக்க வைக்க, தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்திள்ளது. இதன்படி, ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை முடிவுகள் வர, ஏழு மணி நேரம் பிடிக்கும்.
இந்நிலையில், ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை முடிவுகளை, ஐந்து முதல் ஆறு மணி நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல, காத்திருக்கும் பயணியர் வசதிக்காக, இருக்கைகளின் எண்ணிக்கையும் 450லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இணைப்பு விமானத்தில் செல்லும் பயணியருக்கு, 'ரேபிட்' சோதனை வாயிலாக 20 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகின்றன.
ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து வரும் விமானங்களில், நாள் ஒன்றுக்கு 800 பயணியருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சென்னை விமான நிலையம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment