குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுக்க விழிப்புணர்வு வாகனம் அறிமுகம் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, December 7, 2021

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுக்க விழிப்புணர்வு வாகனம் அறிமுகம்

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுக்க விழிப்புணர்வு வாகனம் அறிமுகம் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், இரண்டு விழிப்புணர்வு பிரசார போலீஸ் வாகனங்களை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒலி, ஒளி கட்டமைப்புடன் கூடிய இரண்டு விழிப்புணர்வு வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த வாகனங்களை, தலைமை செயலகத்தில் கொடி அசைத்து, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இந்த வாகனங்கள் வாயிலாக, குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது குறித்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்பிணர்வு ஏற்படுத்தப்படும். வாகனத்தின் நான்கு புறங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, சுற்றுப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை காணவும், பதிவு செய்யவும் முடியும். தேவைப்படின் பாதுகாப்பு பணியிலும், இந்த வாகனங்களை பயன்படுத்தலாம். 

இந்த வாகனங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அனைத்து சட்டம், ஒழுங்கு பணிகளுக்கும்; அவசர காலங்களில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை, தமிழகம் முழுதும் எடுத்துச் செல்லும் வகையில், ஒரு வாகனம், சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., கட்டுப்பாட்டிலும்; மற்றொரு வாகனம் சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டிலும் செயல்படும். இந்த விழிப்புணர்வு வாகன துவக்க நிகழ்ச்சியில், கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர்,டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment