தேசிய அளவில் சிந்திக்க வேண்டும் மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை
'மாநில அளவில் சிந்திக்காமல், தேசிய அளவில் சிந்தித்தால்தான், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமாகும்,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் 22-வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நடந்தது.
பல்கலை வேந்தரும், கவர்னருமான ரவி, முதுநிலை, இளநிலை பட்டதாரிகள் 282 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இதில், 204 பேர் நேரில் பட்டம் பெற்றனர்.திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லுாரியில், பி.வி.எஸ்சி., படிப்பில் முதலிடம் பிடித்த மாணவர் சங்கருக்கு, 26 பதக்கங்கள், இரண்டு பண விருதுகளை, கவர்னர் ரவி வழங்கினார். எம்.வி.எஸ்சி., மாணவி தமிழினிக்கு ஆறு பதக்கங்கள், பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவி ரஞ்சனி ராஜசேகரனுக்கு நான்கு பதக்கங்கள்; பி.டெக்., உணவு தொழில்நுட்பம் முடித்த பூர்விதாவுக்கு இரண்டு பதக்கங்களை, கவர்னர் வழங்கினார்.
டில்லியில் உள்ள, தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் செயலர் பி.கே.ஜோஷி, பட்டமளிப்பு உரையாற்றினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் செல்வகுமார், பல்கலை செயல்பாடுகள், சாதனைகள் குறித்து அறிக்கை அளித்தார்.கவர்னர் ரவி பேசியதாவது:இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் தொழில் முனைவோராக மாற வேண்டும்.
மத்திய அரசின் முயற்சிகளில், 'ஸ்டார்ட் அப்' தொழில் துவங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நீங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். முயற்சியை ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது.
புதிய புதிய சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் ஓர் இலக்கை நிர்ணயித்து, உழைக்க ேவண்டும். அதற்காக பயிற்சியும், நிபுணத்துவமும் பெற வேண்டும். துவக்கத்தில் தோல்விகள் ஏற்படலாம். அதற்கெல்லாம் கவலைப்படாமல், தொடர்ந்து முன்னேறி சென்றால் வெற்றி நிச்சயம்.நம் நாடு இப்போது, அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தமிழகம், முன்னேறிய மாநிலம். ஆனால், இந்த வளர்ச்சி என்பது அனைத்து பகுதிகள், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் வசிக்க வீடு, உண்ண உணவு, உடுத்த உடை, குடிநீர், மருத்துவம், கல்வி, மின்சாரம் ஆகிய அடிப்படை தேவைகள் கிடைக்க வேண்டும். இதற்கான திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.ஒரு மாநிலத்தில், அனைத்து பகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டும். அதற்கு மாநில அளவில் சிந்திக்காமல், தேசிய அளவில் சிந்திக்க வேண்டும். அப்போதுதான், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமாகும். இவ்வாறு கவர்னர் பேசினார்.
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், பல்கலை இணைவேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு துறை செயலர் ஜவஹர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
26 பதக்கங்கள் பெற்ற பனியன் தொழிலாளி மகன்!
திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லுாரியில், பி.வி.எஸ்சி., பட்டம் படித்து, பல்கலை அளவில் முதலிடம் பிடித்த மாணவர் சங்கர் 26 பதக்கங்களை பெற்று, சாதனை படைத்து உள்ளார். சங்கரின் தந்தை ராமசாமியும், தாய் புஷ்பராணியும், திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளர்கள். தற்போது கேரளாவில், எம்.வி.எஸ்சி., படித்து வரும் சங்கர் கூறியதாவது:
என் தந்தை, தாய் இருவரும் தங்கள் உழைப்பு முழுவதையும் என் படிப்புக்காக செலவிட்டனர். 26 பதக்கங்கள் பெற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன். எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் கிடைக்காததால்,கால்நடை மருத்துவ படிப்பை தேர்வு செய்தேன். புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்க, ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பதே என் லட்சியம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment