உடல் இயக்கம் குறைந்து உடல் பருமன் அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. உடல் பிரச்னைகளைத் தவிர்க்க தற்போது உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகியுள்ளது.
உடலுடன் மனநிலையை சரியாக வைத்துக்கொள்ளவும் தினமும் 30 நிமிடமாவது லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
உடல் பருமன் பிரச்னை அதிகரித்துக் காணப்படும் சூழ்நிலையில் பல்வேறு நோய்களைத் தவிர்க்க தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஏனெனில், உடல் பருமன் பிரச்னையால் நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்டவை தாக்குகின்றன.
அதுபோல மன அழுத்தமும் தற்போது அதிகமாகக் காணப்படும் சூழ்நிலையில் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தையும் குறைக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
உடற்பயிற்சி என்றவுடன் ஜிம்முக்கு சென்று கடினமாக ஒர்க்-அவுட் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.
மிகவும் எளிதாக தினமும் காலை அரை மணி நேரம் நடக்கலாம். முடிந்தவர்கள் சிறிது நேரம் ஓடலாம்.
அலுவலகத்திற்குச் செல்லும்போதோ அல்லது வெளியில் செல்லும்போது முடிந்தவரை நடக்கலாம். லிப்ட்டுக்குப் பதிலாக மாடிப்படிகளை பயன்படுத்தலாம். இதுபோன்று அவ்வபோது உடல் இயக்கத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இளைஞர்கள் அல்லது செய்ய முடிந்தவர்கள் ஸ்க்வாட், பிளாங்க் போன்ற வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஸ்கிப்பிங், விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
உடல் எடையைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடத்தல், ஓடுதல் உள்ளிட்ட பயிற்சிகளே போதுமானது.
பெண்களுக்கு நேரம் இல்லை என்றாலும் வீட்டு மொட்டை மாடியில் நேரம் கிடைக்கும்போது சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். போதுமானது. எனினும் காலையில் நடத்தல் கூடுதல் பலனைத் தரும். இத்துடன் பொருந்தா உணவுகளைத் தவிர்த்து சத்தான உணவுகளை எடுத்து உடல் பருமன் இருப்பவர்கள் கொஞ்சம் டயட் மேற்கொள்ளுங்கள்.
அனைவருமே தினமும் 30 நிமிடமாவது லேசான உடற்பயிற்சி செய்தால் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment