அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் நகரத்தில் அமைந்துள்ளது கார்ட்டர் இடைநிலைப் பள்ளி. இந்த பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர், சுயநினைவை இழந்திருக்கிறார். 66 மாணவர்கள் பயணிக்கும் வண்டியை உடனடியாக நிறுத்த முயற்சித்து வண்டியை நிதானமாக இயக்கி இருக்கிறார். இருந்த போதும் அவரால் முடியவில்லை.
உடனடியாக ரேடியோ மெசேஜில் தன்னுடைய உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவிக்கு ஆட்களை அழைத்திருக்கிறார். செய்தியைக் கூறிய சில வினாடிகளிலேயே சுயநினைவை இழந்து மெல்லச் சாய்ந்துவிட்டார். வண்டி போக்குவரத்து மிகுந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறது. உடனடியாக இதனைக் கண்ட டில்லன் ரீவ்ஸ் என்ற 7-ம் வகுப்பு மாணவர், துரிதமாகச் செயல்பட்டு ஸ்டியரிங்கை பிடித்து, பிரேக்கில் கால் வைத்து அழுத்தியிருக்கிறார். வண்டி நின்றதும் உடனடியாக அவரச உதவி எண்ணுக்கு அழையுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டுநரின் உடல்நலக் குறைவிற்கான பிரச்சினை என்னவென்று தெரியவில்லை. இதற்கு முன்பு இவருக்கு இதுபோல நடந்தது இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஆபத்தான சூழலைப் புரிந்து கொண்டு தக்க சமயத்தில் 66 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
No comments:
Post a Comment